அன்புள்ளங்கள்

 
 திரு. டி. ராஜகோபால சாஸ்திரிகள்  
வயது : 101 
மறைவு: 10-11-2012, சனிக்கிழமை
 

100 வயது தாத்தாவும்,
கோடுபோட்ட காகிதங்களும், இன்ங் பேனாவும்...
 
அல்லது
 
ஞானம் பகிர்
(100 வயது விகடன் வாசகரின் உண்மை கதை! )

காம்கேர் கே. புவனேஸ்வரி
 
விகடனில் பிரசுரத்தில் நான் எழுதியலேப்டாப் A-Z’ புத்தகத்தின் விளம்பரம் வந்திருந்தது.  வழக்கம் போல அதை ஸ்கேன் செய்து என் லேப்டாப்பில் பதிவு செய்து கொண்டு விட்டு என் நிறுவன வேலைகளில் மூழ்கினேன். நீண்ட காலங்களாக .டி துறையில் இருப்பதாலும், ஏற்கனவே நிறைய பதிப்பகங்கள் என் எழுத்துக்களுக்கு அங்கீகாரம் கொடுத்திருந்ததாலும், வழக்கம் போல அப்புத்தகத்தை நான் தான் பிரசுரம் செய்ததைப் போல, வாசகர்கள் பலர் எனக்கு போன் செய்து புத்தகம் நன்றாக இருக்கிறது என்று எழுதியிருக்கும் நடை முதல் அட்டைப்பட டிசைனிங் வரை வாழ்த்து கூறினார்கள்.
 
அன்று புதன் கிழமை. காலை 8.30 மணி இருக்கும். என் செல்போனில் அழைப்பு வந்தது. எதிர் முனையில்காம்கேர் புவனேஸ்வரி மேடம் இருக்காங்களா? அவங்ககிட்ட பேசணும்...’ என்று நடுத்தர வயது குரல். ‘எஸ்.நான் தான் புவனேஸ்வரி...’ என்று சொன்னதும் அவர் கூறினார்.
 
என்னுடைய வீட்டில் குடியிருக்கும் 100 வயது பெரியவர் ஒருவர் உங்களை சந்திக்கணும் என்று விரும்புகிறார். நீங்கள் அப்பாயின்ட்மெண்ட் கொடுத்தால் கார் வைத்து அவரை அனுப்பி வைக்கிறேன்
 
எதற்காக என்னைப் பார்க்கணும் என்று அவர் விரும்புகிறார்?’
 
அவர் ஒரு ஜோசியர்...நிறைய ஆராய்ச்சிகள் செய்து வைத்திருக்கிறார்...கம்ப்யூட்டரில் கூட ஏதேதோ செய்து கொண்டே இருப்பார். லேப்டாப்பும் வைத்துள்ளார்...உங்களிடம் ஏதோ கேட்கணுமாம்
 
எனக்கு விஷயம் ஓரளவிற்குப் புரிந்து போனது. லேப்டாப்பை இயக்குவதில் தான் சந்தேகம் கேட்கப் போகிறார் என்று நினைத்துக் கொண்டே, என் டிஜிட்டல் டைரியைப் புரட்டியபடி நான் ஃப்ரீயாக இருக்கின்ற நாளைத் தேடினேன். சனிக்கிழமை மாலை(13-04-2012) 5 மணிக்கு வரும்படி நாள் கொடுத்தேன்.
 
சனிக் கிழமையும் வந்தது. சரியாக 5 மணிக்கு அவரது கார் என் நிறுவனத்தை அடைந்ததும், நானே நேரடியாக வாயிலுக்குச் சென்றேன். அப்பெரியவர் கைதடியுடன் மெதுவாக காரை விட்டு இறங்கி நடந்து வந்தார். அவரைத் தொடர்ந்து கார் டிரைவர்  கையில் ஒரு கூடையுடன் வந்தார். பெரியவர் எனக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். எனக்கு சிலிர்த்துப் போனது.
 
அவர் வேட்டி கட்டியிருந்தார். மேலே ஒரு பெரிய அங்கவஸ்திரம்(துண்டு) போட்டிருந்தார். சட்டைப் போடாமலேயே அவரது வெள்ளை வெளேறென்ற தாடி மேல் உடம்பு முழுவதையும் மறைத்திருந்தது. அவரைப் பார்க்கும் போது என் தாத்தாவின் நினைவு  வந்தது. என் தாத்தா, அப்பாவின் அப்பா, அச்சு அசலாக அவரைப் போலவே இருப்பார். தாடி வைத்திருந்ததால் அவரை நாங்கள்  தாடி தாத்தாஎன்று தான் அழைப்போம். தாடி என்ற அடைமொழி இல்லாமல் எங்கள் தாத்தாவை நாங்கள் அழைத்ததாக நினைவே இல்லை.
 
பெரியவருக்கு காது கேட்காது. கை அசைத்துப் பேசுங்கள். வாய் அசைவையும், கை அசைவையும் வைத்து அவர் நன்றாகப் புரிந்து கொள்வார். தேவைப்பட்டால் எழுதிக் காண்பியுங்கள்என்று சொல்லிவிட்டு டிரைவர் காருக்குச் சென்று விட்டார்.
 
100  வயது பெரியவர் வரப் போகிறார் என்றதும் என் அப்பா, அம்மாவையும் அன்று அலுவலகத்திற்கு வரச் சொல்லியிருந்தேன். அலுவலகத்தில் என் அறையில் நான் என் அப்பா, அம்மாவுடன் அவரைச் சுற்றி அமர்ந்தேன்.
 
என் முகத்தைப் பார்த்தவாறு, என் வயது, குலம், கோத்திரம் போன்றவற்றை ஏதோ என்னை முன்பே தெரிந்த நபர் போல சொல்லிக் கொண்டே போனார். நாங்கள்  மூவரும் ஆச்சர்யத்தில் அதிசயத்தோம். இறுதியில் அவர் வந்த காரணத்தைக் கூறினார்.
 
எனக்கு வயது 100... கண் நன்றாகத் தெரியும். முறுக்கைக் கடித்து சாப்பிடும் அளவிற்கு பல் நன்றாக உள்ளது. ஆனால் காது மட்டும் இடியே விழுந்தாலும் கேட்காது. நீ கம்ப்யூட்டரில் கெட்டிக்காரியா இருப்பதைப் போல நான் ஜோசியத்தில் கெட்டிக்காரன்.  என் அறிவை யாருக்காவது தானமா கொடுத்து விட்டு தான் சாகணும்...எனக்குள்ளேயே என் ஞானம் அழுகிக் கொண்டிருக்கிறது. என் வீட்டில் 100 புத்தகங்களுக்கும் மேல் இருக்கு. எனக்கு அப்புறம் யார் அவற்றைப் படிக்கப் போகிறார்கள்? பயன்படுத்தப் போகிறார்கள்?’ என்று ஆதங்கத்தோடு பேசிக் கொண்டே போனார் அந்தப் பெரியவர்.
 
எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. யாருக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு. என் அப்பா, அம்மாவுக்கு கேட்கவே வேண்டாம்...
 
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் என கேட்ட தாய்’ – இது தான் அவர்களின் மனநிலை.
 
தங்கள் பெண்ணை, அறிவிலும், அனுபவத்திலும் முதிர்ந்த இப்படிப்பட்ட பெரியவர்  வந்து சந்தித்து,  தன் அறிவை தானம் செய்ய வருவது குறித்து ஆனந்த பெருமிதத்தில் திளைத்தார்கள். இப்படி என் அப்பா அம்மா மனதை சந்தோஷப்படுத்தியதில் எனக்கும் பேரானந்தம் தான்.
 
மீண்டும் அவர் என்னை சந்திக்க விரும்பியதன் காரணத்தைத் தொடர்ந்தார்.
 
புத்தகத்தின் பின்பக்க அட்டையில் நான் என் அப்பா அம்மா பெயரில் நடத்தி வருகின்றஸ்ரீபத்மகிருஷ்என்ற அறக்கட்டளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அப்பா, அம்மா மீது இவ்வளவு மரியாதை வைத்திருக்கும் பெண் கண்டிப்பாக நல்ல படிப்பாளியாக மட்டுமில்லாமல், ஒழுக்கமுள்ளவளாகவும், நேர்சிந்தனை கொண்டவளாகவும் தான் இருப்பாள். எனவே இவளிடம் தான் தன் வித்தையை தானம் செய்ய வேண்டும், இவள் தான் சரியான நபர்  என்று முடிவெடுத்ததாக அவர் கூறினார். மேலும் நான் அவரை வாயிலுக்கு வந்து வரவேற்ற மரியாதையையும் மதிப்பதாகக் கூறினார்.
 
எனக்கு கண்களில் கண்ணீர் முட்டியது.  நான் பெற்ற இப்பேற்றுக்கு கடவுளிடம் மனதார நன்றி செலுத்தினேன். என் முன்னால் இருக்கும் பெரியவருக்கு கை கூப்பி நன்றி தெரிவித்தேன்.
 
 இதற்கிடையில் என் நிறுவனத்திலேயே தயாரிக்கபடும் டீயை ஆவிபறக்க சாப்பிட்டோம்.
 
கோடு போட்ட காகிதங்களையும், இன்ங் பேனாவையும் கொடுக்குமாறு கேட்டார். எனக்கு கோடு போட்ட பேப்பர்கள் பிடிக்காது. ஏனென்றால் அவை  எழுதும்  போது என் எண்ணங்களை கட்டுப்படுத்தும், ஃப்ரீயாக எழுத இயலாது என்பதால் வைத்துக் கொள்வதில்லை. அதுபோல இன்ங் பேனாவும் வைத்திருப்பதில்லை. நான் வேகமாக எழுதும் போது பேனாவின் நிப் வளைந்துவிடும். எனவே இன்ங் பேனாவும் இல்லை.
 
கோடு போடாத காகிதங்கள், ரீஃபில் பேனா, வைத்து எழுதுவதற்கு டேபிள் என்று வசதியாக அவரை அமரச் செய்தேன்.
 
பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பித்தார். அப்பா என்றால் சூரியன், அம்மா என்றால் சந்திரன் என்று ஜாதகத்தின் அடிப்படையை அன்றே தொடங்கி விட்டார். நாங்கள் மூவரும் பொறுமையாக அவர் சொல்வதைக் கேட்டோம். ஏற்கனவே நான் 15 வருடங்களுக்கு முன்பே அஸ்ட்ராலஜி சாஃப்ட்வேர் தயாரித்திருக்கிறோம். அந்த அனுபவம் இருந்ததால் பெரியவர் சொல்லிக் கொடுப்பது நன்றாகவே புரிந்தது எனக்கு.
 
நான் ரொம்ப நாள் உயிரோடு இருக்க மாட்டேன். இன்னும் 3 மாதமோ, 6 மாதமோ அவ்வளவு தான் என் ஆயுள். அதற்குள் நான் எல்லாவற்றையும் உன்னிடம் ஒப்படைக்கணும் குழந்தாய். எனவே தினமும் 1 மணி நேரம் எனக்காக ஒதுக்குவாயா? நான் வந்து உனக்குக் கற்றுத் தருகிறேன். அப்புறம் என்கிட்ட இருக்கும் புத்தகத்தை எல்லாம் உன்கிட்ட ஒரு நல்ல நாள் பார்த்துக் கொடுக்கணும்’ – இது தான் பெரியவரின் விண்ணப்பம்.
 
 அன்று நாங்கள் எந்த பதிலையும் சொல்லவில்லை. சரி என்று தலையை மட்டும் ஆட்டினேன். எங்களை விட்டு பிரிய மனமில்லாமல் இரவு 9 மணி அளவில் கிளம்பினார். கிளம்பும் போது 116 ரூபாயை(அவர் சம்பிரதாயப் படி) தான் கொண்டு வந்திருந்த வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமம் இவற்றோடு வைத்துக் கொடுத்தார் எனக்கு.
 
ஜோதிடத்தில் ஜாம்பவனான நான் கம்ப்யூட்டரில் புலியான உன்னிடன் தோற்றுப் போவதற்காகத் தான் வந்திருக்கிறேன்...நான் உன்னிடம் தோற்றுப் போவதில் எனக்குப் பெருமை தான்..’ என்று சொல்லிவிட்டு விடைபெற்றார். இவரது இந்த வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தது. ‘நடப்பெதெல்லாம் நல்லதுக்கா, கெட்டதுக்காமனதுக்குள் மிகப்பெரிய கேள்விக்குறி.
 
 அன்றில் இருந்து பெரியவர் ஒருநாள் விட்டு ஒரு நாள்  என் நிறுவனத்துக்கு 2 மணி நேரம் வருகிறார். ஞாயிறு அன்று நானும், என் பெற்றோரும் அவருக்கும் சேர்த்து சமையல், சாப்பாடு செய்து கொண்டு காலையிலே அவர் கோட்டூர்புரத்தில் இருக்கின்ற அவர் இருப்பிடம் சென்று மதியம் வரை தங்கி ஜோதிடப் பாடம் கற்றுக் கொண்டு திரும்புகிறோம்.
 
என் அம்மாவை தன் மகளாகவும், அப்பாவை மாப்பிள்ளையாகவும், என்னை பேத்தியாகவும் பாவித்து,  மகள், மாப்பிள்ளை, பேத்திஎன்று  உறவு முறை சொல்லி வாஞ்சையாக அழைப்பதைப் பார்க்கும் போது எங்கள் மூதாதையர்களில் ஒருவரே நேரில் வந்திருந்து இப்படி அனுகிரகம் செய்வதைப் போல் தோன்றுகிறது. இந்த வருட தமிழ் புத்தாண்டு எந்த வருடமும் இல்லாத அளவிற்கு மிகச் சிறப்பாக இருந்தது.  பழம், பூ, மாங்காய், வேப்பம்பூ, வெல்லம், அரிசி  என்று சாஸ்திரம் தப்பாமல் வீடு தேடி வந்து சீர் வைத்துக் கொடுத்து ஆசிர்வாதம் செய்துவிட்டுச் சென்றார்.
 
அவரது புத்தகங்கள் என் அலுவலகத்துக்கு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.  இவர் ஜோதிடத்தால் பயனடைந்த(இழந்த பல கோடிகளைத் திரும்பப் பெற்ற) ஒரு பிசினஸ் மேன் ஒருவர் தான் தங்குவதற்கு ஏசியுடன் வீடு கொடுத்துள்ளார். தள்ளாத இந்த வயதிலும், தானாகவே மடியாக சமைத்து சாப்பிடுகிறார். காக்காய்க்கு அன்னமிட்ட பிறகு தான் சாப்பிடுகிறார். ஜோதிடத்தில்  வருகின்ற வருமானத்தை வைத்து ஜீவனம் செய்கிறார். தனக்குப் போக இருப்பதை தானம் செய்கிறார்.
 
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, சான்ஸ்கிரிட் என்று ஒன்பது மொழிகளை சரளமாகப் பேசுகிறார். ஜோதிடத்தில் வல்லுநராக திகழ்கிறார். கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கீபோர்டில் சர்வ சாதாரணமாக டைப் செய்து பிரிண்ட் எடுக்கிறார். வெளியிடங்களுக்குச் செல்லும் போது லேப்டாப்பை எடுத்துச் செல்கிறார். இவர் ஜோதிடம் சொல்லி, நாள் குறித்துக் கொடுத்து பிசினஸ் தொடங்கிய பலர் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.
 
இவரிடம் பர்சனல் விஷயங்களைப் பற்றிக் கேட்டால் மட்டும் பதில் வருவதில்லை. கண்களில் ஆழ்ந்த சோகம் தெரிகிறது. அதை மறைப்பதற்கு  என்ன...சொல்லிக் கொடுக்கும் போது பேச்சை மாற்றுகிறாய்?’ என்று செல்ல கோபத்தோடு பாடத்தைத் தொடர்கிறார்.
 
இவரது தொடர்பு கிடைத்த நாளில் இருந்து என் டேபிளில் கோடு போட்ட காகிதங்களும், இன்ங் பேனாவும் இடம் பெற்றுள்ளது. இப்போதெல்லாம் எனக்கும் இவை பிடிக்கிறது.
 
இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தன...
 
ஜோதிடத்தில்  மட்டுமல்லாது, அவரது அனுபவங்கள் அனைத்தும் எனக்குள் சென்று கொண்டிருந்தன...
 
அவர் தன் அனுபவங்களை என்னிடம் ஷேர் செய்து கொள்கின்ற சில நேரங்களில் நான் டல்லாக இருந்தால்,
 
 ‘என்ன மக்கு போல இருக்கிறாய்....புத்தகமெல்லாம் எழுதறே...இப்படி டல்லா இருக்கியே...நீ எழுதறியா? இல்லா யாராவது எழுதிக் கொடுத்து உம்பேரைப் போட்டுக்கறியா?...’
 
- என்று என்னை உரிமையாக விமர்சித்து, என் மனநிலையை இயல்புக்குக் கொண்டு வருவார்.
 
 நாளை அல்லது நாளை மறுநாள் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று இரண்டு நாட்களுக்கு முன் சொன்னார்...
 
சொன்னதை நிரூபித்து விட்டார்.
 
நேற்று மதியம் இறைவனடி(10-11-2012) சேர்ந்து விட்டார். இன்று (11-11-2012) காலை 9.00 மணிக்கு காரியங்கள் நடைபெற உள்ளது.
 
அழுகை வரவில்லை...நல்லதொரு ஆசானை இழந்து விட்ட துக்கம் மனதை கனக்கச் செய்தது. நல்ல படிப்பினையைக் கொடுத்து விட்டுச் சென்றுள்ளார்.
 
ஆம். அவரது வார்த்தைகள் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
 
 என் அறிவை யாருக்காவது தானமா கொடுத்து விட்டு தான் சாகணும்...எனக்குள்ளேயே என் ஞானம் அழுகிக் கொண்டிருக்கிறது...’
 
தன் அனுபவம் மற்றும் ஞானம் இவற்றை  பதிவு செய்யாமல் சுமையாக தனக்குள்ளேயே தேக்கி வைத்துக் கொள்வது எத்தனை பெரிய துக்கத்தைக் கொடுக்கும் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டுச் சென்று விட்டார். தன் இறுதிக் காலத்தில் என்னிடம் அவர் பகிர்ந்து கொண்டது கொஞ்சம் தான். அவை கடலில் கரைத்தப் பெருங்காயம் தான்.
 
அறிவு, ஞானம், கல்வி, பணம்...
இவை அனைத்தும்  நமக்கு மட்டுமே பயனளித்தால்
அது மிகப்பெரிய பாரமாகிப் போய் விடும்...
அத்தனையையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்
என்கின்ற மாபெரும் உண்மையைச்
சொல்லி விட்டுச் சென்று விட்டார்,  100 வயது  தாத்தா...
 தாத்தாவின் பெயர் திரு. டி. ராஜகோபால சாஸ்திரிகள்.
 
அனுபவஸ்தர்கள் வாழ்ந்து
சொல்லி விட்டுச் சென்றுள்ளார்கள்...
கடைபிடிப்பதும், நிராகரிப்பதும்
அவரவர் விருப்பம்.
 
தாத்தாவின் ஆன்மா
சாந்தியடைய
இறைவனை பிராத்தித்து 
முடிக்கிறேன்.

-முற்றும்